×

திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் செயல்பாட்டிற்கு வருமா தரைவழி மின்பாதை திட்டம்: இணைப்பு பெற பொதுமக்கள் முன்வராததால் கேபிள்கள் சேதம்

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காமராஜர்கடை வீதியில் அமைக்கப்பட்ட தரைவழி மின்பாதை பணிகள் நிறைவடைந்தும், மின்சாரம் வழங்கப்படாமல் கேபிள்கள் சேதமடைந்ததால் அத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரசுவாமி கோயில் தேரோடும் நான்கு வீதியிலும் தரைவழி மின்பாதை அமைக்க திருக்காட்டுப்பள்ளி மின்வாரியத்தால் பரிந்துரை அரசுக்குஅனுப்பப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசு ரூ.1 கோடியே 28 லட்சத்து 21 ஆயிரம் நிதியும், மாநிலஅரசு ரூ.15 லட்சத்து 7 ஆயிரம் நிதியும் அளித்தன.

பின்னர் இத்திட்டம் சுமார் 2000 இணைப்புகள் கொண்ட காமராஜர் கடைவீதி, பழமார்நேரிசாலை, பூதலூர் சாலை கடைவீதி பகுதிகளில் அடிக்கடி மின்பாதையில் ஏற்படும் விபத்துகளால் மின்தடை ஏற்படுவதாலும், பாதுகாப்பு கருதியும் அப்பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு கடந்த 2019ம் ஆண்டில் கூடுதல் நிதியாக ஒன்றிய அரசு ரூ.30 லட்சத்து 66 ஆயிரமும், மாநிலஅரசு ரூ.4 லட்சத்து 11 ஆயிரமும் ஒதுக்கி பணிகள் துவங்கப்பட்டன. ஆமை வேகத்தில் நடந்த பணிகள் கொரோனா காலத்தில் முற்றிலும் முடங்கி போனது.2ஆண்டுகளாக தரைவழி மின்சார கேபிள் பதிக்கும் பணிகள் செய்யப்பட்டு ஆங்காங்கே மின்சார பாக்ஸ்களும் அமைக்கப்பட்டன. கடைவீதியில் மின்சார கேபிள்கள் கேட்பாரற்று கிடந்ததால் அதன்மீது கனரக வாகனங்கள் உள்ளிட்டவை ஏறி சென்று கேபிள்கள் சேதமடைந்தன. கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சேதமடைந்த கேபிள்கள் உள்ளதாக புகார்கள் வந்தன.

இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கேபிள்களை வெட்டிஅகற்றியதால் கடைவீதியில் ரூ.1 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் தரைவழி மின்சாரம் வழங்கும் திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய உதவிபொறியாளர் கூறுகையில், திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் உள்ள மின்உபயோகிப்பாளர்கள் தரைவழியா கமின்இணைப்பை பெற்றுக்கொள்ளாததால் சாலையில் வைக்கப்பட்டிருந்த கேபிள்கள் மீது வாகனங்கள் தொடர்ந்து சென்றதால் சேதம் அடைந்துள்ளது. காமராஜர் கடைவீதியில் அதுபோல் சேதமடைந்த கேபிள்களை மட்டும் தற்போது வெட்டிஎடுத்துள்ளோம். பழமார்நேரிசாலையில் கேபிள் சரியாக உள்ளவற்றில் உபயோகிப்பாளர்கள் மின்இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். வாகனங்கள் சென்றதால்சேதமடைந்து கேபிள்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ள இடங்களில் தரைவழியாக மின்சாரம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தரைவழி மின்சாரம் வழங்க கேபிள்கள் பதிக்கும் பணி முடிந்து விட்ட நிலையில் மின்உபயோகிப்பாளர்கள் தான் தரைவழி மின்கேபிளை தங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சென்று மீட்டர்பாக்ஸூடன் இணைத்துக்கொள்ளவேண்டும். கடைவீதி மின்உபயோகிப்பாளர்கள்அனைவருக்கும் இதுகுறித்து தகவல் கொடுத்தும் அவர்கள் இதன் அவசிய, அவசரத்தை உணரவில்லை. தற்போது மின்கம்பத்திலிருந்து இணைப்பு வழங்க கட்டணமாக ரூ.1400 வசூலிக்கப்படுகிறது. தரைவழி மின்சாரம் வழங்க உபயோகிப்பாளர்கள் இடம் வரை கேபிள்கூட இத்திட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மின்கம்பத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் தனியாக வாங்க வேண்டுமானால் ரூ.3000 கட்டணமாக செலுத்த வேண்டிவரும். தரைவழி கேபிள்மூலம் சப்ளை பெறுவதால் பாதுகாப்பும் அதிகரிக்கிறது. இதை மின்உபயோகிப்பாளர்கள் புரிந்து கொண்டு இணைப்பை உடனடியாக அமைத்து கொள்ளவேண்டும். ஆனால் கடைவீதி மின்உபயோகிப்பாளர்கள் இதனை பயன்படுத்தாமல் அலட்சியம் காட்டியதால் காமராஜர் கடை விதியில் கேட்பாரற்று கிடந்த கேபிள்கள் முற்றிலும் சேதமடைந்தன என்றார்.


Tags : Thirukattupalli , Thirukkattupalli, shop street, overhead power line, public, cables damaged
× RELATED திருக்காட்டுப்பள்ளி பூதமணியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை